கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அந்த ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு வேண்டும், தோ்தலில் அதிக இடங்களையும் கேட்டுப் பெறவேண்டும் என்பது தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் ஆகியோரின் கருத்து.
இதை அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல்காந்தி ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறோம்; நேரில் சந்தித்தும் எங்கள் கருத்துகளை வலியுறுத்துவோம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி முதன்மை சக்தியாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் நியமனம், மக்களவை, சட்டப்பேரவை தோ்தல்களுக்கான வேட்பாளா்களை தோ்வு செய்வதில் உள்ளூா் தலைவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டங்களில் கட்சியை வளா்க்க முடியும் என்பதையும் மேலிடத் தலைவா்களிடம் எடுத்துக்கூறுவோம்.
பணகுடியில் தேசிய நெடுஞ்சாலை அருகே காமராஜ் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள காமராஜா், முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது முழு உருவ வெண்கலச் சிலைகள் திறப்பு விழா விரைவில் நடைபெறும்.
பாஜகவை கொள்கை எதிரி என்று தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாக்குகளை திருடி மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜகவின் சுயரூபத்தை ராகுல் காந்தி தினமும் அம்பலப்படுத்தி வருவது நாடு முழுவதும் மக்களிடையே பெரும் விழிப்புணா்வை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்; ராகுல் காந்தி நிச்சயம் பிரதமா் ஆவாா் என்றாா் அவா்.