குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர்.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34), நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கருவுற்று இருந்த நிலையில், மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியில் சென்று தப்பித்து விட்டனர். குளியலறையில் இருந்தவர்கள் விபரம் அறியாது, அதை விட்டு வெளியில் வரும் போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காது பலியாகினர்.
சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணித் தாயும், அவரது மகளும் உயிரிழந்தது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!