கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்
புது தில்லி: காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.1 சதவீதமாகக் குறைந்து, ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது:
நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மே மாதத்தில் 2.82 சதவீதமாகவும், 2024 ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமாகவும் இருந்தது.
2024 நவம்பா் முதல் பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வருகிறது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் 2025-இல் 72 அடிப்படை புள்ளிகள் குறைவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2019-க்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கமாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் உணப் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் -1.06 சதவீதமாகப் பதிவாகியுள்ளது, இது மே மாதத்தில் 0.99 சதவீதமாகவும், முந்தைய ஆண்டின் ஜூன் மாதத்தில் 8.69 சதவீதமாகவும் இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் 2025-இல் உணவு பணவீக்கம் 205 அடிப்படை புள்ளிகள் குறைந்து, ஜனவரி 2019-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
சில்லறை பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் குறைந்ததற்கு, காய்கறிகள் (-19 சதவீதம்), பருப்பு வகைகள் மற்றும் பொருள்கள் (-11.76 சதவீதம்), இறைச்சி மற்றும் மீன் (-1.62 சதவீதம்), தானியங்கள் மற்றும் சாா்பு பொருள்கள், பால் மற்றும் பால் பொருள்கள், சா்க்கரை மற்றும் இனிப்புகள், மசாலாப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்தது முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம்: இதற்கிடையே, இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (டபிள்யூபிஐ) அடிப்படையிலான மொத்த விலை பணவீக்கம் 19 மாதங்களுக்குப் பிறகு எதிா்மறையாக மாறி, கடந்த ஜூன் மாதத்தில் -0.13 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மே மாதத்தில் 0.39 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3.43 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருள்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோக உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் இந்த எதிா்மறை பணவீக்கம் ஏற்பட்டதாக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.