BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு; வினைகளைப் போக்கிடும் சிவதரிசனம்
காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு! வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வளம் தரும் வியதீபாத தரிசனம் 04.01.2025, சனிக் கிழமை, அதிகாலை 04.00 மணிக்கு
நாம் நாட்காட்டியைப் பார்க்கும்போது, ஒவ்வொரு மாதமும் கண்களில் படுகின்ற முக்கிய நாட்களில் 'வியதீபாதம்' (வ்யதீபாதம்) என்பதும் ஒன்று. வியதிபாதம் என்றால் என்ன? அன்றைக்கு செய்யப்படவேண்டிய வழிபாட்டு முறைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
வியதீபாதம்' என்பது 27 விதமான யோகங்களில் ஒன்று. அத்தகைய யோக தினத்தில் வழிபடுவதற்கு உரிய சிறந்த ஷேத்திரமாக திருவாவடுதுறைக்கு (நாகை மாவட்டம்) அருகில் அமைந்துள்ள திருக்கோழம்பம் என்கிற ஸ்தலம் திகழ்கின்றது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் இந்நாளில் திருக்குளம்பியம் என வழங்கப் பெறுகின்றது.
அம்பிகை பசுவுருவில் பால் சொறிந்து பூஜிக்கும் போது, கால் இடறியதால் பசுவின் குளம்பு பட்டு ஏற்பட்ட வடுவினை இன்றும் மூலவரின் பாணத்தில் காணலாம். அதனாலேயே இத்தலத்து மூலவர் 'ஸ்ரீகுளம்பிய நாதர்' என்ற நாமத்தை ஏற்றருளுகின்றார். குயில் வழிபட்டமையால் ஸ்ரீகோகிலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மிகப் புராதனமான இந்த கோழம்பத்து ஆலயம் வ்யதீபாத வழிபாட்டிற்கு உரியதானது எப்படி என்பதைக் காண்போம்.
மூவகை யோகங்கள் எவை?
பொதுவாக யோகங்களை மூன்று விதமாக நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.
01.ஜெனன கால ஜாதகத்தில்,கிரகங்களின் சேர்க்கையினால் ஏற்படும் யோகங்கள்.
02. நட்சத்திர, தின சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள். இவை சித்தயோகம், அமிர்த யோகம், மரண யோகம் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுவன.
03. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள். இவை விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை உள்ள 27 விதமான யோகங்கள் ஆகும் இவற்றுள் ஒன்றுதான் 'வியதீபாதம்'.
வ்யதீபாதம்' யோகங்களில் சிறந்தது...ஏன்?
ஒரு மாதத்திற்கு 27 நட்சத்திரங்கள் கிரமமாக தோன்றுவது போல, 27 யோகங்களும் தோன்றுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த வியதீபாத யோகம். மாதத்திற்கு ஒன்று எனக் கணக்கிடப் பட்டாலும், ஏறக்குறைய 13 வியதீபாத தினங்கள் ஒரு வருடத்திற்கு ஏற்படுகின்றன.
இந்த வியதீபாதமானது யோகம் என்று சொல்லப்பட்டாலும், சுப யோகத்திற்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. இதனை அசுப யோகம் என்றே சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இத்தகைய தினங்கள் சுப விசேஷங்களுக்கு உரிய தினங்கள் அன்றி, மாறாக பித்ரு காரியங்களான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்றவைகளுக்கு மிகச் சிறப்பான தினங்களாகக் கருதப் படுகின்றன.
இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் வியதீபாத தினம் 'மஹாவ்யதீபாதம்' என்று சிறப்பிக்கப் படுகின்றது.
அமாவாசை, வருடப்பிறப்பு, அயனப் பிறப்பு, மாதப் பிறப்பு, இன்னபிற...என ஒரு வருடத்திற்கு இந்துக்கள் செய்யவேண்டிய 96 தர்ப்பண தினங்களில் இந்த வியதீபாத தினங்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
வியதீபாதம்' - புராணம் சொல்லும் செய்தி...!
ஒரு சமயம் சந்திர பகவானுக்கு குருபத்தினியான தாரையின் மீது விருப்பம் ஏற்பட்டது. இதனை அறிந்த சூரிய பகவான் கோபத்துடன் சந்திரனை நோக்க, அவரும் பதிலுக்கு சினத்துடன் பார்த்தாராம். இவ்விருவரின் சினந்த பார்வைக் கலப்பினால் தோன்றிய தேவதையின் சொரூபமே 'வியதீபாத' யோகத்திற்கு உரியதாயிற்று. எனவேதான், இது அசுப யோகம் என்று வழங்கப் படுகின்றது. இதற்குரிய அதிதேவதை ஈஸ்வரன் ஆவார்.
வியதீ பாதம் - திருக்கோழம்பத்தில் விசேஷம் ஏன்?
வியதிபாத யோகத்திற்கு அதிதேவதை சிவபெருமான் ஆவார். பொதுவாக இத்தகைய தினங்களில் காசி, கயை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து , வழிபாடுகள் மேற்கொள்வது இந்துக்களின் கடமை ஆகும். தட்சிண காவிரிதேசத்தில் உள்ள திருக்கோழம்பம் எனும் இந்த சிவ தலமானது வியதிபாத வழிபாட்டிற்கு உரிய மிகச் சிறப்பான தலமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
அன்றைய தினத்தில், இத்தலத்து ஆலயத்தில் செய்யப்பெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுவோருக்கு பித்ரு தோஷங்கள் நீங்கப் பெற்று, சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஸ்தல வரலாறு சொல்லும் செய்தி ஆகும்.
இத்தலத்து கோகணேஸ்வரரை அகத்தியர், போகர், கொங்கணர், திருமூலர் முதலான சித்தர் பெருமக்கள் வழிபாடு செய்துள்ளனர் என்பது பெரியோர் கூறும் உண்மை. இன்றும் பல சித்தர்கள் அரூபமாக வந்து இத்தலத்து இறையை பூஜிக்கின்றார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
வியதிபாத நாட்களில் கோழம்பத்து ஆலயத்தில் ஹோமங்கள் செய்து, கலச நீரினைக் கொண்டு மூலவரை அபிஷேகிக்கும் போது உண்டாகும் அதிர்வுகள் வழிபடுவாரின் மீது படும் போது, அவர்களின் பித்ரு தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது சித்தர்கள் வாக்கின் வழிவந்த தொன்மையான ஐதீகம். அன்றைய தினம் இத்தலத்து ஈசரை 'த்ரிசேதி' எனப்படும் முந்நூறு நாமாவளிகளைச் சொல்லி மலர்களால் அர்ச்சித்தல் விசேஷம் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது.
இக்குறிப்புகள் முற்காலத்தில் பழமையான ஓலைச்சுவடிகளில் சித்தர்களால் எழுதி வைக்கப் பட்டிருந்ததாக அறிகின்றோம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வியதிபாத தினங்களில் இத்தலத்தில் செய்யப்பெறும் ஹோமம், அபிஷேகம் முதலான வழிபாடுகளில் கலந்துகொண்டு பயன்பெறும் அன்பர்கள் பலர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு பித்ரு சாபங்கள் நீங்கப்பெற்று, முன்னோர்களின் ஆசிகளோடு, ஸ்ரீ கோகணேஸ்வரரின் அருளையும் பெற்று வாழ்வில் வளம் பெறலாமே...!
காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு
ஒரு சமயம் கோழம்பநாதரின் பக்தராகிய பெரியவர் ஒருவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆலய தரிசனத்திற்காக வந்தவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதோடு, தாமும் ஆலயத் திருப்பணியில் பங்கேற்க விரும்புவதாகச் சொன்னார். சற்று நேரத்தில், அவருக்கும் நமக்குமான உரையாடல் சுவாரஸ்யமாக நீளத் துவங்கியது.
பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். காஞ்சி மஹா பெரியவரின் திருப்பெயராகிய ஸ்ரீசந்திர சேகரன் என்பதே இவரது பெயரும். கோழம்பத்திற்கு அருகிலுள்ள அசிக்காடு பூர்வீகம்.
தம் இளமைக்காலத்தில், காஞ்சி மஹா பெரியவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக தம்மை மடத்து அணுக்கர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டவர். தம்முடைய அனுபவங்களை மிக எளிமையாக பகிர்ந்து கொண்டே வந்தபோது திடீரென, " இந்த கோழம்பத்துக்கும் மஹா பெரியவாளுக்கும் சம்பந்தம் உண்டு... தெரியுமோ...?" என கேட்கத் திகைத்துப் போனோம்.
வலதும் இடதுமாக தலையைத் தயக்கமாய் அசைத்தபடி, "சொல்லுங்கோ" என பரவசமாகத் தயாரானோம். அவர் மெல்லத் தொடங்கினார்.
"அப்போ, நான் ரொம்ப சின்ன வயசு. டன்லப் க்ருஷ்ணமூர்த்தி ஐயர் மூலமாக மஹா பெரியவா தரிசனமும் தொடர்பும் கெடைச்சது. கிட்டத்தட்ட அம்பது வருஷங்கள் முன்னாடி..,
அது ஒரு தனுர் (மார்கழி) மாஸம். பெரியவா வழக்கமான தரிசனம் முடிச்ச பின்னாடி, எங்களையெல்லாம் கூப்டா. சடேர்னு என்பக்கம் திரும்பினவர் " குத்தாலத்து பக்கத்ல கோழம்பம்னு ஒரு ஷேத்ரம் ... தெரியுமா நோக்கு...?" அப்டீன்னு கேட்டார்.
"தெரியும் பெரீவா" ன்னு விநயமாக பதில் சொன்னேன்.
"ஒன் பூர்வீகம் பக்கமோ ...?" என்று குழந்தைபோல சிரித்தவர், "அப்போ ஒண்ணு செய். வர்ர மஹாவ்யதீபாதத்தன்னிக்கு ஆறு ப்ராம்மணர்களை ருத்ர பாராயணம் பண்ணச் சொல்லி அவாளுக்கு கம்பளி தானம் கொடுக்கறத்துக்கு ஏற்பாடு பண்றயா...?" அப்டீன்னு கேட்டு உத்திரவு பண்ணினா.
பெரியவா உத்திரவு பண்ண மாதிரியே இந்த கோயில்ல நிறைவேத்தினோம். நாலஞ்சு மாஸங்களுக்கு பின்னால பெரீவாளே திடீர்னு இந்தப் பக்கத்து ஊர்களுக்கு யாத்ரா விஜயம் பண்ணினா. குத்தாலம், எஸ்.புதூர், சாத்தனூர் வழியா கோழம்பம் வந்து இந்த ஸ்வாமியை தரிசனம் பண்ணியிருக்கா. மஹா பெரியவாளின் பாதங்கள் பட்டிருக்கு இந்த ஷேத்ரத்லேயும்...!
அவாளோட உத்திரவின் பேரில் இரண்டு தடவைகள் லோக ஷேமத்துக்காக இந்த கோயில்ல மஹாவ்யதீபாதம் அன்னைக்கு ருத்ர பாராயணம் பண்ணச்சொல்லி, ஆறு ப்ராம்மணாளுக்கு கம்பளி தானம் பண்ணியிருக்கு".
தவிர, அந்த சமயத்ல சாத்தனூர்ல ஆரம்பிச்சு திருமந்திரத்தில் உள்ள எல்லா பாட்டையும் சொல்லிண்டே வந்து திருவாவடுதுறையில் பூர்த்தி பண்ணச் சொல்லி எங்களுக்கு பெரியவா உத்திரவு பண்ணினா. அப்பவும் திருக்கோழம்பம் வழியாகத்தான் ..., இந்த கோழம்ப நாதரை தரிசனம் பண்ணிண்டு, இதே வழியா திருவாவடுதுறை போனது இன்னைக்கும் மறக்க முடியாத சந்தோஷம்."
" இப்போ நீங்கள்ளாம் முயற்சி பண்ணி இவ்ளோ ஸ்ரத்தையா கோயில் விசேஷாதிகளைப் பண்றேள். ரொம்ப சந்தோஷம்".என்று அவர் சொல்லி முடித்தபோது சலனமற்று நெகிழ்ந்திருந்தோம்.
அகத்திய குருவும்; திருமூல குருவும்; கொங்கணர், போகர் முதலான சித்தர்களும் வழிபட்ட கோழம்பநாதர் ..! காஞ்சியின் கருணையும் இந்த மண்ணில் பதிந்த கதை கேட்டு கண்களில் நீர் பெருகிற்று.
இந்த புண்ணியக் கதையினை நாமும் அறிந்திட வேண்டும் என்று எண்ணம் கொண்ட அந்த பரம்பொருளின் அனுக்ரஹத்தினை என்னவென்று சொல்வது...?
அந்த கருணையின் நீட்சி இன்று துறைசை ஆதீனகர்த்தரின் வழிகாட்டலாகத் தொட்டுத் தொடர்ந்திடும் குருவினருளினை எண்ணி, வியந்து வணங்கிடுவதனைத் தவிர வேறென்ன சொல்ல இயலும்...?
வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வளம் தரும் வியதீபாத தரிசனம் 04.01.2025, சனிக் கிழமை, அதிகாலை 04.00 மணி...