காட்பாடி சாலையில் செயல்படாத சிக்னல்கள்; மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்?!
வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக காட்பாடி செல்லும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வேலூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் செல்வதற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் சிக்னல் கோளாறால், சிக்னல் வேலை செய்யாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தை இணைக்கும் பிரதான சாலை என்பதால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். வேலூரில் இருந்து ஆந்திர மாநில பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக இருப்பதால் இந்த சாலையை கனரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையை கடக்க முடியாதபடி அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில் வேலூர் மாநகர பகுதியில் இருக்கும் சில்க் மில், காந்தி நகர், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிக்னல்கள் கடந்த சில மாதங்களாக வேலை செய்யவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிக்னல் வேலை செய்யாத பகுதியான காந்தி நகர் பகுதியில் மட்டும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சில்க் மில், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிக்னலும் வேலை செய்யவில்லை, போக்குவரத்து காவலர்களும் போக்குவரத்து சீர் செய்ய வரவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பேசிய வாகன ஓட்டி ஒருவர், “காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கான முக்கிய சாலையாக காட்பாடி சாலை உள்ளது. இந்த சாலையானது காலை முதல் மாலை வரை மிகவும் பரபரப்பாகத்தான் இருக்கும். இந்த சாலையில் இருக்கும் முக்கிய ஜங்ஷன் பகுதிகளில் சிக்னல்கள் கடந்த சில மாதங்களாக வேலை செய்யவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் இந்த சாலையை கடக்கவே முடியவில்லை. சிக்னல் வேலை செய்யாததால் ஜங்ஷன் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே பயணிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு சில நேரத்தில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சாலையை கடக்கின்றனர். எனவே செயல்படாமல் இருக்கும் இந்த சிக்னல்களை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
சில்க் மில், காந்தி நகர், ஓடை பிள்ளையார் கோயில், பாரதி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள செயல்படாமல் இருக்கும் சிக்னல்களை சரி செய்து சாலையில் பயணிப்போரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்?