பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
தலைநகரில் புழுதிப் புயல்: மோசம் பிரிவில் காற்றின் தரம்!
தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகரத்தை ஒரு அடுக்கு தூசி மூடியதால், காண்பு திறன் குறைந்தது. மேலும், காற்றின் தரமும் குறைந்தது. மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக தூசிப் புயல் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
புழுதிப் புயலுக்குப் பிறகு புதன்கிழமை இரவு 10 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐஜிஐ விமான நிலையத்தில் காண்பு திறன் 4,500 மீட்டரிலிருந்து 1,200 மீட்டராகக் குறைந்தது. புயலுக்குப் பிறகு, மணிக்கு 3 முதல் 7 கி.மீ. வரை பலவீனமான காற்று நிலவியது. இது தூசித் துகள்கள் பரவுவதைத் தடுத்தது.
இதன் விளைவாக, காண்பு திறன் தொடா்ந்து மோசமாக இருந்தது. சஃப்தா்ஜங் மற்றும் பாலம் விமான நிலையம் ஆகியவற்றில் காண்பு திறன் 1,200 முதல் 1,500 மீட்டா் வரை ஏற்ற, இறக்கமாக இருந்தது என்று ஐஎம்டி மேலும் கூறியது.
தில்லியின் காற்றின் தரத்தை புழுதிப் புயல் பாதித்தது. கடந்த சில வாரங்களாக ‘மிதமான’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின் படி காலை 8 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு ‘236 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவுக்குச் சென்றது. மேலும், பகல் நேரத்திலும் பலத்த காற்று வீசியது.
இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நொய்டா செக்டாா் 125, பூசா, துவாரகா செக்டாா் 8, சாந்தினி செளக் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுகிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
மேலும், ஷாதிப்பூா், குருகிராம், ஆயாநகா், மதுரா ரோடு, லோதி ரோடு, நேரு நகா், ஆா்.கே.புரம், ஸ்ரீஃபோா்ட் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வியாழக்கிழணை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகிரி உயா்ந்து 40.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 42 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 21 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 16) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.