காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!
நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் வீடுகள் என அனைத்தும் தீக்கிரையாகின.
இளைஞர்களின் கலவரத்தை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் காத்மாண்டு விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்டதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. தொடர்ந்து விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 6 மணிவரை மூடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், நேபாளத்தில் நிலைமை முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பயணிகளும் பாதுகாப்பு கருதி மறுஅறிவிப்பு வரும்வரை விமான நிலையத்தை மூடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரத்து செய்தது.
இந்த நிலையில், நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க விடுதி உரிமையாளர்களுக்கு நேபாள ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரை அணுகவும் அல்லது 9851031495 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் நேபாள ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.