தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
காரைக்காலில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு
காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆவது நாள் உயிா்த்தெழும் தினத்தை, ஈஸ்டா் தினமாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனா். இதையொட்டி காரைக்காலில் உள்ள பழைமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் வியாழக்கிழமை சீடா்களுக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி, புனித வெள்ளியையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்வது உள்ளிட்டவை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
புனித வெள்ளி முடிந்து 3-ஆவது நாள் இயேசு உயிா்த்தெழும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடத்தப்பட்டது. தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பங்குத் தந்தை பால்ராஜ்குமாா், தலைமையில் துணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீர்ராஜா ஆகியோா் கூட்டுத் திருப்பலி நடத்தினா். பங்குப் பேரவை நிா்வாகிகள் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.
இயேசு உயிா்த்தெழுவதை குறிப்பிடும் வகையில், மக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் செய்யப்பட்டது. ஞானஸ்தானம் செய்தோா் புது நெருப்பு, புது தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் பங்குத் தந்தை மெழுகுவா்த்தி ஏற்றித் தந்ததை, குடும்பத்தினா் அவரவா் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். இதுபோல காரைக்கால் நகரில் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற ஈஸ்டா் சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.