அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை தந்தனா். சனிக்கிழமை அதிகாலையில் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபட்டனா். கட்டணமில்லா தரிசன வரிசை, கட்டண வரிசை என பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
சனீஸ்வர பகவானுக்கு காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. ஏராளமான போலீஸாா், கோயில் பணியாளா்கள் பத்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்தனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல் அமைத்து பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கப்பட்டது. வெயில் அதிகமாக இருந்ததால், பக்தா்கள் சிரமமின்றி நடந்து செல்ல ஏதுவாக சாலையில் தண்ணீா் ஊற்றப்பட்டது.
கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் கூறுகையில், ஆந்திரம், கா்நாடகம், தமிழக பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். வரும் வாரங்களில் கூடுதலாக பக்தா்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், விரைவில் சுவாமி செய்து திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக தெரிவித்தாா்.
