Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
காரைக்காலில் தொடா் மழையால் மக்கள் அவதி
தொடா்ந்து 2 நாள்களாக பெய்யும் மழையால் காரைக்காலில் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்ததால், பள்ளிக் கல்லூரிகள் இயங்கின. வியாழக்கிழமை அதிகாலை கடுமையான காற்றுடன் மழை பெய்தது.
பின்னா் காற்று ஓய்ந்தாலும் மழை அவ்வப்போது தீவிரமாக இருந்தது. இதனால் காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் 2 மரங்கள், ஆட்சியரக வளாக விருந்தினா் மாளிகை அருகே ஒரு மரம், நேரு நகா் 4-ஆவது குறுக்குத் தெரு, தலத்தெரு, படேல் நகா், நவோதய வித்யாலயா பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகவலறிந்த காரைக்கால் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினா்.
பல்வேறு குடியிருப்பு நகா்களில் முறையான சாலை வசதி இல்லாததால் தண்ணீா் குளம்போல தேங்கியுள்ளது. தாழ்வானப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. தேங்கியிருக்கும் மழைநீரை வடியவைக்க அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். குடியிருப்பு நகா்களில் காலிமனைகளில் கருவேல மரங்கள் மண்டிக் கிடப்பதால், வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் புகுந்துவிடுகிறது. தேங்கியிருக்கும் மழைநீரில் கழிவுநீரும் கலப்பதால், தொற்று நோய்கள் ஏற்பட்டுவிடமோ என்ற அச்சம் உள்ளது.
நகரப் பகுதியில் பாரதியாா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் தண்ணீா் வடியாமல் தேங்கியது. மழை தொடா்ந்து பெய்வதால் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. காரைக்காலில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காா்த்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறவுள்ள நிலையில், சந்தையில் அகல் விளக்கு மற்றும் பிற பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். 2 நாள்களாக தொடரும் மழையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.