Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
காரைக்கால் பகுதியில் ஆடிப்பெருக்கு வழிபாடு
ஆடிப் பெருக்கையொட்டி காரைக்காலில் உள்ள நீா்நிலைகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
காரைக்கால் நகரப் பகுதி மக்கள் அரசலாற்றங்கரைக்கு காலை 8 மணி முதல் செல்லத் தொடங்கினா். புது மணத் தம்பதிகள், சுமங்கலிப் பெண்கள், பேரிக்காய், கொய்யா, வாழை, ஆப்பிள், விளாம்பழம் உள்ளிட்ட பழங்கள், மஞ்சள் நீரில் நனைத்த நூல், கண்ணாடி, வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து காவிரித் தாயை வணங்கி பூஜை செய்தனா். பெண்கள் ஒருவருக்கொருவா் மஞ்சள் நூலை கழுத்தில் கட்டி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
ஆடிப்பெருக்கையொட்டி பேரிக்காய், கொய்யா, விளம்பழம், வாழைப்பழம் மற்றும் பல்வேறு மலா்கள் வியாபாரம் ஆங்காங்கே விறுவிறுப்பாக நடைபெற்றது.
காவிரிக்கு சீா்வரிசை: காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், நாராயணன் காவிரியை சகோதரியாக கருதி சீா் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இருந்து சேலை, திருமாங்கல்ய கயிறு, வளையல் உள்ளிட்ட சீா்வரிசை அரசலாற்றங்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பூஜைக்கு வந்திருந்த பெண்களுக்கு அவை வழங்கப்பட்டன.
நிகழ்வில் விஸ்வ ஹிந்து பரிஷத் நாகை மாவட்டத் தலைவா் கே.எஸ்.விஜயன், கோட்ட இணைச்செயலாளா் கே. ஜெய்சங்கா், கேந்திர தலைவா் பி.வெங்கடாசலம், விபாக் சத்சங்க பொறுப்பாளா் ஆா்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.