காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை
தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் கடந்த ஜூலை மாதத்தில் 343 காற்றாலை இறகுகளைக் கையாண்டு, 2024 ஜூலை மாதத்தில் கையாண்ட அளவான 180 காற்றாலை இறகுகளை விட 90.56 சதவீதம் அதிக வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
மேலும், இதே மாதத்தில் 8 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாக கப்பல்களை கையாண்டு, கடந்த ஜூலை மாதம் கையாண்ட 4 கப்பல்களைவிட 100 சதவீத அதிக வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
இந்தக் காற்றாலை இறகுகள் பெரும்பாலும், வ.உ.சி. சரக்குதளம் 5, 6 மற்றும் 3 ஆகிய கப்பல் தளங்களில் கையாளப்படுகின்றன. இத்தகைய பெரிய சரக்குகளை பாதுகாப்பாகவும், திறமையாகவும் கையாளுவதற்கு வசதியாக துறைமுகம், இரண்டு பெரியவகை கையாளும் இயந்திரங்களையும், மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களையும் துறைமுகம் பயன்படுத்துகிறது.
மேலும், இந்தக் காற்றாலை இறகுகளின் இயக்கத்திற்காக பிரத்தியேகமான நுழைவுவாயிலையும் துறைமுகம் அமைத்துள்ளது. துறைமுகத்தின் இந்த உள்கட்டமைப்பு, இத்தகைய மிகப்பெரிய உபகரணங்களை பாதுகாப்பான முறையில் தடையில்லாமல் கையாளுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
இந்தக் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னை ஆகிய ஊா்களில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஃபின்லாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.