காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்!
இந்திய நகரங்களில் காற்று மாசு பாதித்த நகரங்களையும், தூய காற்று கிடைக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தரக்குறியீடு 50-க்கு குறையில் இருந்தால் பாதுகாப்பானது. 51 முதல் 100 வரையில் இருந்தால், பெரிதாக பாதிப்பேதும் இல்லை. 101 முதல் 200 வரையில் இருந்தால், இதயம், நுரையீரல் தொடர்பான நோயுள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
201 முதல் 300 வரையில் இருந்தால், வெளியில் நீண்டநேரம் இருப்பவர்களுக்கு சுவாச பாதிப்புகள் ஏற்படலாம். 301 முதல் 400 வரையில் இருந்தால், சுவாச நோய்கள் ஏற்படும் அளவிற்கு மோசமானதாக இருக்கும். 401 முதல் 450 வரையில் இருந்தால், கடுமையானதாகவும், 450-க்குமேல் இருந்தால், ஆரோக்கியமானவர்களைக்கூட பாதிக்கும் அளவிற்கு கடுமையான தீவிரமானது என்று பிரிக்கப்படும்.
இதையும் படிக்க:ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
அந்த வகையில், காற்றின் தரக்குறியீடு 33 என்ற அளவில் திருநெல்வேலிதான், இந்திய நகரங்களில் தூயக் காற்றைப் பெற்று, முதலிடத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதுடன், சுற்றி வயல்வெளிகள் அதிகமிருப்பதால், நெல்லை மாவட்டத்தின் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது.
அதற்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் 43 தரக்குறியீட்டு அருணாசலபிரதேசத்தின் நாகர்லாகுன் நகரம் உள்ளது. மேலும், தரக்குறியீடு என்ற நிலையில், தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், முதல் 5 இடங்களில் தமிழகத்தின் இரு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, மோசமான காற்றின் தரக்குறியீடு பெற்ற நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மோசமடைந்து செல்லும் தில்லிதான் முதலிடத்தில் உள்ளது. தில்லியில் காற்றின் தரக்குறியீடு 357 என்ற நிலையில் உள்ளது.
பொதுவாகவே, வட மாநிலங்களில் காற்றின் தரம் குறிப்பிடும்வகையில் இல்லை. இதன் காரணமாக சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகையின்போதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. அங்கு தீபாவளி பண்டிகையின் போதெல்லாம் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.