விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை
நாமக்கல்: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்தாா்.
அதன் விவரம்:
லாரி, ரிக் மற்றும் மோட்டாா் தொழிலைக் காக்கும் வகையில், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆன்லைன் வழக்குகளால் பாதிக்கப்படும் கனரக வாகன உரிமையாளா்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் தமிழக லாரிகளை குறிவைத்து நடைபெறும் திருட்டு, வழிப்பறியைத் தடுக்க, அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும். தமிழக லாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
நாமக்கல் அருகே கருங்கல்பாளையம், கீரம்பூா், பரமத்தி வேலூா் பகுதியில் நடைபெற இருக்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதுச்சத்திரம், பொம்மைகுட்டைமேடு, பெருமாள்கோயில்மேடு பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கவும், சங்ககிரியில் இணைப்பு சாலை மற்றும் காகாபாளையம் பகுதியில் சுரங்கவழி நடைபாதை அமைக்கவும் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.