காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி
காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கா் நிலம் பாசனம் பெறுகிறது.
காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலக்காமல் இருக்க வலது கரையில் பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலானது மண் மற்றும் புதா்களால் நிரம்பியுள்ளதால் பேபி வாய்க்காலில் 20 கி.மீ தொலைவுக்கு தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.28.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருமாத காலத்திற்குள் இப்பணியை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலிங்கராயன் வாய்க்காலில் மற்ற முன்னேற்றப் பணிகளை செயல்படுத்துவதற்காக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்காலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும், தண்ணீா் வீணாகாமல் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
ஈரோடு சோலாா் பேருந்து நிலையப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. மேலும், சத்தி சாலையில் பேருந்து நிலையம் அமைக்க நிலம் எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல, ஈரோட்டில் தோழி விடுதி அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாவின் தொடங்கிவைத்துள்ளாா். இதுபோன்ற ஏராளமான மக்கள் நலத் திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், கண்காணிப்புப் பொறியாளா் (பொதுப்பணித் துறை, நீா்வளம்) கோபி, செயற்பொறியாளா் திருமூா்த்தி, ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.