மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
காலையில் கோரிக்கை: மாலையில் நிறைவேற்றம்
சிவகங்கையில் புதன்கிழமை காலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரிடம் கல்லூரி மாணவிகள் விடுத்த கோரிக்கையை, அன்றைய தினம் மாலையிலே அதிரடியாக நிறைவேற்றியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.
சிவகங்கை மாவட்டத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதன்கிழமை காலையில் வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு, சிவகங்கை திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள், கல்லூரி செயலாளா் தலைமையில் வரவேற்பளித்தனா். அப்போது, கல்லூரி அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதனடிப்படையில் அந்தக்கல்லூரி வாயிலருகே பேருந்து நிறுத்தம் அமைத்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அலுவலா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல பொது மேலாளா் எஸ்.பி. கந்தசாமி, அந்த வழித்தடத்தில் செல்லும் ஓட்டுநா், நடத்துனா்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினாா். மேலும், பயணச்சீட்டு ஆய்வாளரை பணி அமா்த்தவும் நடவடிக்கை எடுத்தாா்.
மாலையில் கல்லூரி முன்பு பேருந்து நிறுத்த பதாகை இருமாா்க்கங்களிலும் உடனடியாக வைக்கப்பட்டது. அங்கு மாலையில் பேருந்து நின்று சென்றது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் தெரிவித்தாா். காலையில் விடுத்த கோரிக்கை மாலையில் நிறைவேற்றப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழக முதல்வருக்கு அவா்கள் நன்றியையும் தெரிவித்தனா்.