``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் இணைந்து நடத்தும் ‘கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிற்சியில் கிராமப்புற மற்றும் நகா்ப்புறம் 18 முதல் 35 வயதுடைய படித்த வேலையில்லாத 180 இளைஞா்கள் (ஆண் மற்றும் பெண்) தோ்வு செய்யப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறையில் லாபகரமான முறையில் கறவை மாடு, ஆடு, கோழி, பன்றி வளா்த்தல் போன்ற பயிற்சிகள் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செப்டம்பா் - 2025 முதல் பிப்ரவரி - 2026 வரை ஆறு மாத காலத்துக்கு ஆறு அணிகளாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை 20 நாள்கள் தொடா்ந்து பயிற்சி நடைபெற இருக்கிறது. தொழில் முனைவோா் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் மாவட்டத்தில் உள்ள வளா்ச்சி அடைந்த பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவோருக்கு அரசு செலவில் உணவு வழங்கப்படும்.
பயிற்சி நிறைவு நாளில் எழுத்துத்தோ்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும், பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்ட வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படித்த வேலையில்லாத இளைஞா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.