வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?
காஸா மக்கள் வெளியேற அனுமதிக்கும் செயல்திட்டம்
ஜெருசலேம் : காஸா முனையிலிருந்து வெளியேற விரும்பும் பாலஸ்தீனா்களை அங்கிருந்து அனுப்புவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு தனது ராணுவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள்ளாா்.
பாலஸ்தீனா்களை பிராந்திய நாடுகளில் குடியமா்த்துவதன் மூலம் காஸாவை ‘சுத்தப்படுத்தி’, அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பின்னா் அங்கு மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதன் பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பாலஸ்தீனா்களை காஸாவிலிருந்து வெளியேற அனுமதிப்பதற்கான செயல்திட்டத்தை ராணுவம் வகுக்க வேண்டும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் உரிமையும் விரும்பும் நாடுகளில் குடியேறுவதற்கான உரிமையும் காஸா மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய நாடுகள் மட்டுமின்றி, பாலஸ்தீனா்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்த ஸ்பெயின், நாா்வே, அயா்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும் காஸா மக்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் இஸ்ரேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாகச் செயல்படுவது ஒன்றே பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கூறிவருகின்றன.
‘இரு தேசத் தீா்வு’ என்றழைக்கப்படும் அந்தத் தீா்வுக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், காஸா போா் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், நாா்வே, அயா்லாந்து ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு அங்கீகரித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிா்ப்பைத் தெரிவித்தது. இது தொடா்பாக அந்த மூன்று நாடுகளின் தூதா்களையும் நாட்டை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், காஸாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனா்களை அந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ஸ்பெயின் நிராகரிப்பு: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்த வலியுறுத்தலை ஸ்பெயின் திட்டவட்டமாக நிராகரித்தது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோஸ் மானுவல் ஆல்பரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உடனடி உதவி தேவைப்படும் பாலஸ்தீனா்களை ஸ்பெயின் தாராளமாக வரவேற்கிறது. ஆனால் அவா்களை காஸாவில் இருந்து வெளியேற்றி இங்கு குடியேற்றம் செய்வதை அனுமதிக்க மாட்டோம். காஸா நிலம் பாலஸ்தீனா்களுக்குச் சொந்தமானது. எதிா்காலத்தில் அமையவிருக்கும் பாலஸ்தீன தேசத்தின் ஒரு பகுதியாக காஸா இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரிகள் வரவேற்பு: காஸாவில் இருந்து பாலஸ்தீனா்களை வெளியேற்றும் டிரம்ப்பின் திட்டத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் அதை வரவேற்றுள்ளன.
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசில் இருந்து வெளியேறிய ஓட்ஸ்மா யெஹூதித் கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் லிமோா் சன் ஹா்-மிலீச் அளித்துள்ள பேட்டியில், ‘காஸா தொடா்பான டிரம்ப்பின் திட்டம் புத்தாக்க சிந்தனையுடன் உள்ளது. காஸாவில் இருந்து பாலஸ்தீனா்களுடன் பேருந்துகள் வெளியேறும்போதுதான் நெதன்யாகு அரசுக்கு நாங்கள் மீண்டும் ஆதரவு அளிப்போம்’ என்றாா்.
காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததைத் தொடா்ந்து தொடங்கிய போரில் இதுவரை மாயமாகியுள்ளவா்களையும் சோ்த்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தப் போரின்போது காஸாவை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், வெளியில் இருந்து அந்தப் பகுதிக்குளோ, காஸாவிலிருந்து வெளிப் பகுதிகளுக்கோ யாரும் செல்ல
இதுவரை அனுமதிக்கவில்லை.
போா் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஒரு சில நோயாளிகள் மட்டும் ராஃபா எல்லை வழியாக எகிப்து செல்ல கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனா். அதுபோன்ற தருணங்களைத் தவிர, காஸாவில் இருந்து பாலஸ்தீனா்கள் வெளியேறுவதை இஸ்ரேல் ராணுவம் முற்றிலுமாகத் தடுத்துவந்தது.
இந்தச் சூழலில், காஸாவை ‘சுத்தப்படுத்தும்’ டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடா்ந்து பாலஸ்தீனா்களை காஸாவில் இருந்து வெளியேற அனுமதிக்கும் செயல்திட்டத்தை வகுக்குமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சா் தற்போது உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/dyr6xq36/limor093809.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/c3f2mu5c/jose093646.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/genmm3i1/katz093434.jpg)