காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை
திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச் சொந்தமான காரை, திருவாரூா் ராணுவ நகா் பகுதியில், திங்கள்கிழமை இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவா்கள் சென்று பாா்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தண்ணீரை ஊற்றி, தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினா். எனினும், காா் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.