கிங் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை தகர்த்த குயின் மந்தனா; ஆஸ்திரேலியாவைப் புரட்டியெடுத்த ஸ்மிருதி!
இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.
அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இந்தியா ஆடி வருகிறது.
இந்தத் தொடரானது இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு 40 ஆண்டுகளாக வரலாற்றை மாற்றியமைக்கும் அரிய வாய்ப்பு.
அதாவது, 1983 முதல் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 10 ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது.

இப்படியான சூழலில், இந்தியா vs ஆஸ்திரேலிய 3 போட்டிகள் ஒருநாள் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, 17-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற்றது.
இதனால், இன்றைய (செப்டம்பர் 20) மூன்றாவது போட்டியானது இந்திய அணிக்கு அரிய வாய்ப்பாக அமைந்தது.
மதியம் தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 57 பந்துகளில் அதிரடியாக சதமடிக்க, ஜார்ஜியா வோல், எல்லிஸ் பெர்ரி உறுதுணையாக அரைசதங்கள் அடித்தனர்.
இதனால், 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 412 என்ற ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.
அதைத் தொடர்ந்து, 413 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஒரு ஓப்பனிங் வீராங்கனை பிரதிகா ராவல் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், மற்றொரு ஓப்பனிங் வீராங்கனை துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலிய பவுலர்களைத் திணறடித்தார்.
23 பந்துகளில் அரைசதமடித்து, ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா அடுத்த 27 பந்துகளில் சதத்தை எட்டி, விராட் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை பிரேக் செய்தார்.

அதாவது, ஆஸ்திரேலியாவுக்கெதிராக இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சதம் என்பது, இதற்கு முன்பு 2013-ல் கோலி 52 பந்துகளில் அடித்ததுதான். கோலியின் ஒருநாள் போட்டி கரியரில் அவரின் அதிவேக சதமும் அதுதான்.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் 50 பந்துகளில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கெதிராக அதிவேக சதமடித்த நபர், ஒருநாள் போட்டியில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீராங்கனை, ஒருநாள் போட்டியில் அதிவேக சதமடித்த முதல் இந்திய வீராங்கனை ஆகிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

சதமடித்த பிறகு அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா, தனக்கு உறுதுணையாக அரைசதமடித்து ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவுட்டான அடுத்த ஓவரிலேயே 125 ரன்களில் தானும் ஆட்டமிழந்தார்.
ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தபோது இந்தியாவின் வெற்றிக்கு 29 ஓவர்களில் 197 ரன்கள் தேவைப்பட்டது.
கேப்டன் மற்றும் துணை கேப்டனின் விக்கெட்டுக்குப் பிறகு போராடிய இந்திய அணி 47 ஓவர்களில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்திய வீராங்கனைகள் இப்போட்டியில் பின்க் நிற ஜெர்சி அணிந்து களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.