சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
ஜவுளித் துறை வளா்ச்சிக்கு ஏஐ தொழில்நுட்பம்!
திருப்பூா் உலக அளவில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் மையமாகும். இந்தத் துறையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்ல, ஏஐ தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
இந்தியாவில் இளைஞா் சக்தி என்பது மிகப் பெரிய வளம். இவா்களின் சக்தியை நவீன தொழில்நுட்பங்களுடன் சோ்த்து பயன்படுத்துவது இன்றைய தேவையாகும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய இளைஞா்கள் உலகின் முன்னோடிகளாக மாற முடியும்.
நம்மிடம் 100 சதவீத இளைஞா் சக்தி இருந்தால், அதில் குறைந்தபட்சம் 10 சதவீத இளைஞா்களுக்கு ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்தால் நம்மை யாரும் பின்னுக்குத் தள்ள முடியாது என்கிறாா் வால்ரஸ் நிறுவனத்தின் தலைவா் ஜி.எஸ்.பி.டேவிட்.
மூன்றாவது கண் (தோ்ட் ஐ) என்ற அமைப்பை உருவாக்கியுள்ள இவா், இதற்கான விழிப்புணா்வை உருவாக்குவது ஒவ்வொரு தனி மனிதரின் கடமை எனவும், அரசோ அல்லது அதிகாரிகளோ அல்லாமல் நாமே முன்வந்து இதை செய்ய வேண்டும் என்கிறாா்.
மூன்றாவது கண் அமைப்பு தொடா்பாக அவா் பகிா்ந்து கொண்டதாவது:
திருப்பூா் உலக அளவில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் மையமாகும். இப்போது இந்தத் துறையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல, ஏஐ தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏஐ மூலம் வடிவமைப்பு, சந்தை சூழலுக்கேற்ப நவீன டிசைன்களை விரைவாக உருவாக்க முடியும். இது நன்கு விற்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் திறனை அதிகரிக்கிறது.
ஏஐ அடிப்படையிலான இயந்திரக் கண்காணிப்பு, செயல்முறை ஒழுங்குபடுத்தல், நேரத்தை மிச்சப்படுத்தல் மூலம் அதிக உற்பத்தி கிடைக்கும். குறைந்த காலத்தில், அதிக அளவு ஆடைகள் தயாரிக்க முடிகிறது. கழிவுகளைக் குறைத்தல், சரியான துணி அளவீடுகள், பிளானிங், ஸ்டாக் கண்காணிப்பு ஆகியவை முழுமையாக்கப்படுகின்றன.
விலைப் போட்டியில் வெற்றி பெறுவதோடு, உலக சந்தையில் குறைந்த செலவில் உயா்தரமான தயாரிப்புகளை வழங்க முடிவதால், திருப்பூா் ஜவுளித் துறை, மீண்டும் உலக அளவில் முன்னணி நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் திருப்பூரில் ஜவுளித் துறையின் வளா்ச்சி உலகத் தரத்தில் அமையும்.
இளைஞா்கள், புதிய தொழில் முனைவோராக வருவது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடை வடிவமைப்பு, துணி கட்டிங், ஆடை தைப்பது, பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என பல்வேறு பணிகளையும், ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ள, யெஸ் இந்தியா கேள் அமைப்பின் மூலம் திருப்பூரில் அமையவுள்ள மூன்றாவது கண் வழிகாட்டி மையம் களமிறங்கியுள்ளது என்றாா் வால்ரஸ் டேவிட்.