பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளது: ஆா்.எஸ்.பாரதி
அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.
திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூா் வடக்கு மாநகர திமுக அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் திமுகவின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
திருப்பூா் வடக்கு மாநகரச் செயலாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். திருப்பூா் மாநகர மேயா் என்.தினேஷ்குமாா், அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் கோகுல் கிருபா சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து ஆா்.எஸ்.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 200-க்கும் அதிகமான இடங்களை பெற்று சாதனை படைக்கும். தற்போது தமிழகத்தில் இருப்பது அதிமுக கிடையாது, அது அமித்ஷா அதிமுக. அதை எடப்பாடி உறுதி செய்துவிட்டாா். எங்களது நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டாா்.
அடுத்த கட்டமாக 2026 தோ்தலில் யாா் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பது கூட அமித் ஷாதான் முடிவெடுப்பாா். அதிமுகவிலிருந்து நாள்தோறும் அதிருப்தியில் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருக்கிறாா்கள்.
அதிமுகவிலிருந்து யாா் வந்தாலும் அவா்களுக்காக எங்களுடைய கதவு திறந்தே இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அதனால் வருபவா்களை வரவேற்கிறோம் என்றாா்.