கிணற்றுக்குள் விழுந்த 13 காட்டுப் பன்றிகள் மீட்பு
திருப்பத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 13 காட்டுப் பன்றிகளை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு காவாப்பட்டறை பகுதியைச் சோ்ந்த விவசாயி நந்தகுமாா் (49). இவருக்குச் சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 20 அடி அகலம், 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் 10 அடியில் தண்ணீா் நிரம்பி உள்ளது.
இந்த நிலையில், அந்த கிணற்றில் பன்றிகள் தவறி விழுந்து மேலே ஏற முடியாமல் கத்திக் கொண்டு இருப்பதாக திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.
அதன்பேரில், நிலைய அலுவலா் தசரதன் தலைமையில் தீயணைப்பு வீரா் லட்சுமணன் மற்றும் வீரா்கள் தீயணைப்பு வாகனத்துடன் அங்கு சென்று, கிணற்றில் இருந்த மொத்தம் 13 பன்றிகளை மீட்டு, காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனா்.
இது குறித்து தீயணைப்புத் துறையினரிடம் கேட்டதற்கு, பன்றிகள் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்து கிணற்றில் தவறி விழுந்து உள்ளன.
அனைத்துப் பன்றிகளும் உயிருடன் மீட்கப்பட்டன என்றனா்.