புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
கிராமத்தையே மிரட்டிய போதை கும்பல்; புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் - இளைஞன் கொலையில் பகீர் பின்னணி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகிலுள்ள மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் கடந்த 19-ம் தேதி தங்களின் கிராமத்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த உளியநல்லூர் ஊராட்சிக்குஉட்பட்ட வெள்ளக்குளம் பகுதியைச்சேர்ந்த 5 பேர்கொண்ட போதை கும்பல், சம்பந்தமே இல்லாமல் இவர்கள் அருகில் சென்று தீப்பெட்டி கேட்டு அடாவடியாக வம்பிழுத்திருக்கிறது.
வம்பிழுத்து தாக்கி கும்பல்
மணிகண்டனும், அவரின் நண்பர்களும் தங்களிடம் தீப்பெட்டி இல்லை எனச் சொன்ன பிறகும், காரில் பாட்டுப் போட்டுவிட்டு சாலையில் நடனம் ஆடச் சொல்லி ஊர் இளைஞர்களை மிரட்டியிருக்கிறது போதை கும்பல். அவர்கள் ஆட மறுத்ததால், போதை கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியிருக்கிறது.
இதைப் பார்த்த ஊர் மக்கள் பதறிப்போய் ஓடிவந்தனர். ஊர் மக்களிடம் சிக்காமல், போதை கும்பல் காரில் ஏறி தப்பிஓடியது. காரில் தப்பும்போதுகூட `எங்களையே துரத்துறீங்களா, உங்களை வெட்டிக்கொல்லாம விடமாட்டோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்துகொண்டே சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, தாக்குதலுக்கு ஆளான மணிகண்டன் மற்றும் கிராமத்து மக்கள் அன்று இரவே நெமிலி காவல் நிலையத்தில் உடனடியாக புகாரளித்தனர். புகார் மனுவை பெற்றுகொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் காவலர் தனசேகரன் இருவரும் விசாரணை செய்யாமல் அலட்சியம் காட்டியிருக்கின்றனர் என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த நிலையில், காரில் தப்பிய போதை கும்பல் நேற்று காலை மீண்டும் மேட்டுவேட்டாங்குளம் கிராமத்துக்குள் இரண்டு பைக்குகளில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது. `கண்ணில் படுகிற யாரையாவது வெட்டிக் கொன்றால்தான் இந்த ஊர்க்காரங்களுக்கு நம்மமேல பயம் வரும்’ என்று அந்த கொடூர கும்பல் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட இளைஞர்
அந்த சமயம், தனது வீட்டில் இருந்து வயல்வெளிக்கு நடந்துசென்ற கோபால் என்பவரின் 27 வயது மகன் தட்சிணாமூர்த்தியை சுத்துப்போட்டு வெட்டி சாய்க்க முயன்றனர். சுதாரித்துகொண்டு தப்பிஓட முயன்ற இளைஞர் தட்சிணாமூர்த்தி, வயல்வெளியின் சேற்றில் சிக்கி கீழே விழுந்தார். அப்போது, அந்த கும்பல் தட்சிணாமூர்த்தியின் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டியது. நடுமண்டையில் விழுந்த வெட்டுகள், மண்டை ஓட்டையே பிளந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை கும்பல் அங்கிருந்து தப்பிஓடியது. சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்து மக்களும், தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினரும் சடலத்தை கண்டு கதறி அழுதனர்.
ஆத்திரமடைந்து சடலத்தை பனப்பாக்கம்-அரக்கோணம் சாலையில் வைத்தும் மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை அப்புறப்படுத்த முயன்று, இறுதியாக கைது செய்ய முயன்றனர். காவல்துறையினரின் இந்த போக்கை கண்டித்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் மீது டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதும் பரபரப்பைக் கூட்டியது.
தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா, அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். `முன்கூட்டியே புகார் கொடுத்தும் போதை கும்பல் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகவே ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய நெமிலி எஸ்.எஸ்.ஐ குமார், காவலர் தனசேகர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் எஸ்.பி விவேகானந்த சுக்லா. மேலும், `குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்வோம்’ என்றும் எஸ்.பி உத்திரவாதம் அளித்ததால், மறியலை கைவிட்டு மக்கள் கலைந்துசென்றனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக இளைஞர் தட்சிணாமூர்த்தியின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பதற்றமான சூழல் நிலவுவதால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் தட்சிணாமூர்த்தி அவரின் வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை. படித்து வேலைக்குச் செல்லும் அப்பாவி இளைஞரும்கூட. அவரின் இழப்பு அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது. `சமூக விரோத பின்னணிகொண்ட கொலையாளிகளை கைதுசெய்யாமல் உடலை வாங்க மாட்டோம்’ என மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொதிப்பதால், அவர்களிடம் இரண்டாவது நாளாக போலீஸார் சுமூக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.