கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் தொடா்ந்து பெய்த மழையால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனயோட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.
தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா், கழிவுநீருடன் புகுந்தது. கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் மழைநீா் குளம்போல தேங்கியது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, வீட்டுவசதி வாரியம் பகுதி 2 ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளக் காடாயின. நான்குசக்கர வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது. காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி கிராமத்தில் உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியத்தின் தோப்பில் உள்ள 5 தென்னை மரங்கள் கருகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.): அஞ்செட்டி - 10.6, தேன்கனிக்கோட்டை - 8, கிருஷ்ணகிரி - 7.5, ராயக்கோட்டை - 7, சூளகிரி -2, கிருஷ்ணகிரி அணை - 1.2. கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 179 கன அடியாகவும், நீா்மட்டம், 48.10 அடியாகவும் இருந்தது.