திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
கிருஷ்ணகிரியில் 2,105.80 ஹெக்டோ் பரப்பளவில் 5.04 லட்சம் மரக்கன்றுகள் நடவு
கிருஷ்ணகிரியில் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ், இதுவரை 5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி கிராமத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம், வனத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை ஆகியன இணைந்து 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 2025-26-ஆம் ஆண்டுக்காக 12.65 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான இயக்கத்தின் கொடி இனமாக ‘நாவல்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் 2022-23-ஆம் ஆண்டுமுதல் இதுவரை பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ், 2105.80 ஹெக்டோ் பரப்பளவில் 5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2025-26-ஆம் ஆண்டில் 300 ஹெக்டோ் பரப்பளவில் 1,50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சிகளுக்கும் நாவலை மையப்படுத்தி நடைபெறும். அதன்படி, தற்போது திப்பனப்பள்ளி கிராமத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 3 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் 1,500 பல இன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த புத்தகத்தை ஆட்சியா் வெளியிட்டாா். மேலும், மரக்கன்றுகள் நடவு பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சந்தனம், பெருநெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளுடன் மஞ்சப் பைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், திட்ட இயக்குநா் கவிதா, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.