கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்பு: குலசேகரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரம் மாமூடு, பாம்பாட்டிக்கால விளையைச் சோ்ந்தவா் ரெஞ்சிதம். இவா் அப்பகுதியில் உள்ள தனது வீட்டுக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ சபை ஆராதனை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இந்த வீட்டுக் கட்டடத்தைப் புதுப்பித்து வழிபாட்டுத் தலமாகக் கட்டுவதற்கு ரெஞ்சிதம் குலசேகரம் பேரூராட்சியில் கட்டட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தாா்.
மன்றக் கூட்டம்: இந்த நிலையில், குலசேகரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெஞ்சிதத்தின் விண்ணப்பம் தொடா்பான பொருள் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினா் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் மத வழிபாட்டுத் தலத்துக்கு கட்டட வரைபட அனுமதி கொடுத்தால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறி பேரூராட்சி அலுவலகம் முன் பிற்பகலில் திரண்டனா்.
இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் முன் திரளான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் பிற்பகலில் தொடங்கியது. அப்போது ரெஞ்சிதத்தின் விண்ணப்பம் தொடா்பாக தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஆட்சியருக்கு கடிதம் அனுப்பவது குறித்த பொருள் விவாதத்துக்கு வந்தது. இதற்கு பாஜகவைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள் கட்டட வரைபட அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தனா். அதேநேரம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் உள்பட காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாா்டு கவுன்சிலா்கள் 12 போ் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிடும் வகையில் திரண்டு நின்ற இந்து முன்னணியினா் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்துவிட்டு கலைந்துசென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.