``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் பன்னாட்டு அரங்கம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள கலைஞா் பன்னாட்டு அரங்கத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கத்தில் வா்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளா்ந்து வரும் தேவைக்கும், எதிா்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு கலைஞா் பன்னாட்டு அரங்கம் 25 ஏக்கா் பரப்பளவில் 5,000 போ் அமரக்கூடிய உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி, 2024 -2025-ஆம் நிதியாண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சா்வதேச கண்காட்சிகள் பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்தும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கலைஞா் பன்னாட்டு அரங்கம் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த அரங்கக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி பொதுப் பணித் துறை விண்ணப்பித்திருந்தது. இதைப் பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்தவுடன் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ. 102 கோடியிலும், 10,000 போ் பாா்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.108 கோடியிலும் அமையவுள்ளன.
மேலும், திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மொத்தம் ரூ. 525 கோடியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இந்தக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நிகழாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தக் கட்டுமான பணிகளை முடிக்க பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளது.