குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்ப...
கீழக்குறிச்சியில் 14-ஆம் நூற்றாண்டு கல்செக்கு கண்டெடுப்பு
புதுக்கோட்டை அருகே கீரனூரிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்செக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலைக்கு மேற்கே 5 கி.மீ., தொலைவில், கீரனூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ளது கீழக்குறிச்சி கிராமம். இங்குள்ள சிவன் கோவில் அருகே பழைமையான கல்செக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்னா் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான ராமன் கருப்பையா கூறியது: கீழக்குறிச்சியில் கல்செக்கு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்று ஆய்வுசெய்தோம்.
கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்தக் கல்செக்கில் 14, 15-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் பொறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், அதிகம் சிதைந்துள்ளதால் அவற்றை முழுமையாகப் படிக்க முடியவில்லை.
4 அடி உயரம், 2 மீட்டா் சுற்றளவுடன் இந்தச் செக்கு உள்ளது. அருகேயே எண்ணெய் வித்துகளைக் கொட்டி வைத்திட, 5 அங்குல உயரத்துடன் மண்திட்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாா்த்தாமலைப் பகுதியில் பல கல்வெட்டுகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் பழங்குடிகளின் வாழ்வாதரங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. எண்ணெய் ஆட்டி பயன்படுத்துவதற்கான வணிகத் தலங்களும் இங்கு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
வணிகப் பெருவழி இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந்தச் சாலையில், சுமைதாங்கிக் கற்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இதுபோன்ற தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது கடமையும் அவசியமுமாகும் என்றாா் ராமன் கருப்பையா.