``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!
குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா்.
மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தொடங்கி வைத்தாா்.
இந்தக் கூட்டத்தில் ஹரியாணா, ஆந்திரம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், இமாசல பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையங்களின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.
அரசுத் துறைப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் செயல் முறைகளில், நோ்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிா்ந்து கொள்வது, தோ்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தோ்வு தொடா்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் அஜய்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் அரசுப் பணித் தோ்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பம் செய்யும்போது, ஆதாா் எண் அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர உள்ளோம். அடுத்த தோ்வில் இருந்து இது அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.