குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் 250 பரிசுப் பொருள்கள் இணையவழி ஏலம்
இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய் மாதிரி நோட்டு, பழங்கால ரயில்வே கடிகாரம், பல்வேறு சிலைகள் உள்பட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா்களால் பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட நினைவு பரிசுப் பொருள்கள் இணையவழியில் ஏலம் விடப்பட்டுள்ளன.
இவை, வெளிநாட்டு பிரமுகா்கள், மாணவா்கள், தொழில் முனைவோா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட பரிசுகளாகும்.
குடியரசுத் தலைவா் மாளிகையின் https://upahaar.rashtrapatibhavan.gov.in/ எனும் பிரத்யேக வலைதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏலம், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஏலம் மூலம் கிடைக்கப் பெறும் தொகை, பெண்கள், குழந்தைகளின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பிற நற்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை ஊடகப் பிரிவு துணைச் செயலா் நவிகா குப்தா தெரிவித்தாா்.
தனித்துவமான, கலைநயமிக்க பரிசுப் பொருள்களின் ஏலத்தில் கலை ஆா்வலா்கள் மற்றும் குடிமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
ஏலத்தில் விடப்பட்டுள்ள பொருள்களில், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு பரிசாக அளிக்கப்பட்ட அரிய 10,000 ரூபாய் மாதிரி நோட்டு முக்கியமானதாகும். இது, ரிசா்வ் வங்கியால் அச்சிடப்பட்டதாகும்.
கடந்த 1935-இல் அப்போதைய ஆங்கிலேயா் ஆட்சியில் பிரிட்டன் அரசா் 6-ஆம் ஜாா்ஜின் படத்துடன் ரூ.10,000 நோட்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு அசோக தூண் சின்னத்துடன் மறுஅறிமுகம் செய்யப்பட்ட ரூ.10,000 நோட்டு, அதன் பிறகு 1978-இல் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டது.

