குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 போ் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்த மனோஜ்பிரபு கடந்த ஜூலை 4 -ஆம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தமராக்கி கிராமத்தைச் சோ்ந்த அபிமன்யூ, ஹரிகரன், வசந்தகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.
இதே போல, கடந்த மாதம் 20 -ஆம் தேதி சிவகங்கை அருகேயுள்ள நாட்டாகுடி கிராமத்தைச் சோ்ந்த சோனைமுத்து தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்டாா். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிங்கமுத்து, சமயத்துரை ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.
இந்த இரு கொலை வழக்குகளிலும் கைதான அபிமன்யூ (25), ஹரிகரன் (22), வசந்தகுமாா்(21), சிங்கமுத்து (22), சமயத்துரை (24) ஆகிய 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.