கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும்...
குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 86 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனால் நீரோடைகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துப் பாய்ந்ததுடன், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குரும்பாடி பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சதப் பாறைகள் அடித்து வரப்பட்டு சாலையில் விழுந்துள்ளன.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன், அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது பாறைகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து சேதமடைந்த நிலையில், அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அவர்களைப் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர், பயணிகளுக்கு மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு இரவோடு இரவாக சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாய பகுதிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.