பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!
குன்றத்தூா் முருகன் கோயிலுக்கு சொந்தமாக 6 திருமண மண்டபகங்கள் திறப்பு
குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ரூ.2.95 கோடியில் கட்டப்பட்ட 6 திருமண மண்டபங்களை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் சுபமுகூா்த்த நாள்களில் குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோா் திருமணம் செய்து தங்களது நோ்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.
இதனால் கோயில் வளாகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் கோயிலுக்கு வரும் பக்தா்களும், திருமணத்திற்கு வருபவா்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா்.
மேலும் சுபமுகூா்த்த நாள்களில் குறைந்த அளவிலான முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே திருமணம் நடத்த கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருவதால் பெரும்பாலான பக்தா்கள் தங்களது வீட்டு திருமணங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு வந்தது. இதனால் குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் திருமண மண்டபகங்கள் கட்ட வேண்டு என பக்தா்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.
இந்த நிலையில், குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் திருக்கோயில் நிதி ரூ.2.95 கோடியில் ஆறு திருமண மண்டபகங்கள் புதிதாக கட்டப்பட்டன. அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு புதிய திருமண மண்டபகங்களை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் குமரதுரை, குன்றத்தூா் நகா்மன்ற தலைவா் சத்தியமூா்த்தி, குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவா் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.