கும்பகோணம்: `மாசிமக விழா தீர்த்தவாரி'- மகாமகக் குளத்தில் புனித நீராடிய ஆயிரகணக்கான பக்தர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா, 'தென்னகத்துக்குக் கும்பமேளா' என்று அழைப்படும். ஒவ்வோர் ஆண்டும் மாசிமாதத்தில் வரும் மக நட்சத்திர நாள், 'மாசிமகம்' வெகுவிமர்சையாக நடைபெறும். இதையொட்டி மகாமகக் குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில், இந்தாண்டு, சைவத் தலங்களான காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோயில்களில் கடந்த மார்ச் 3-ம் தேதியும், வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய மூன்று கோயில்களில், கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக விழா தொடங்கியது. இதையடுத்து சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா கண்டருளினர்.
நேற்று காலை ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீவரர் தேரோட்டமும், மாலை சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோயிலைச் சுற்றியும், காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிஸ்வநாதர், அமிர்தவள்ளி அம்பாள் உடனாய அபிமுகேஸ்வரர் சுவாமி சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய மூன்று கோயில்களின் உற்சவமூர்த்திகளுக்கு மகாமகக்குளத்தைச் சுற்றித் தேரோட்டம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, இன்று காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமகக் குளக்கரைக்கு வந்தடைந்தனர். பிறகு, குளத்தில் அஸ்ரதேவருக்குப் பல்வேறு வகையான மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் மகாமகக் குளத்தில், புனித நீராடினர்.
மகாமகத்தின் முதன்மை கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில்களில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருவதால், அந்தக் கோயில்களில் இந்தாண்டு மாசிமகப் பெருவிழா உற்சவம் கிடையாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று கோயில்களில் காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி சுவாமி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில், ஸ்ரீதேவி-பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது.