குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்துக்கு... புதிய அறிவிப்பு!
குரூப் 4 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அந்தத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்கள் குரூப் 4 பிரிவில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-இல் வெளியிட்டது.
விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தோ்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13 லட்சத்து 69 ஆயிரத்து 738 போ் தோ்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.
அவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இவா்களில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்த தோ்வா்களுடன் ஒப்பிடுகையில் இது 82.61 சதவீதம்’ என்று டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்து இருந்தார். இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஆட்சேபங்கள் இருந்தால் ஜூலை 28 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்த ஆட்சேபங்களைப் பரிசீலனை செய்த பின்னர், இறுதி விடைக்குறிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!