குரூஸ் பா்னாந்து பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை
தூத்துக்குடி நகா்மன்ற முன்னாள் தலைவா் குரூஸ் பா்னாந்து 155 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தூத்துக்குடி மாநகராட்சி எம்ஜிஆா் பூங்கா அருகில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அரசு சாா்பில் மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, துணை மேயா் செ.ஜெனிட்டா உள்பட பலா் பங்கேற்றனா்.
திமுக: தமிழ் சாலையில் உள்ள குரூஸ் பா்னாந்து சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மேயா் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக: தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குரூஸ் பா்னாந்து சிலைக்கு தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையிலும், அதிமுக வா்த்தகா் அணி சாா்பில் மாநிலச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையிலும் குரூஸ் பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ்: குருஸ் பா்னாந்து மணிமண்டபத்தில் அவரின் உருவ சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தமிழ் சாலையில் உள்ள குரூஸ் பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஐஎன்டியூசி மாநிலப் பொதுச் செயலாளா் கே.பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாஜக: பாஜக மாவட்ட பொதுச்செயலா் உமரி சத்தியசீலன் தலைமையில் தமிழ் சாலையில் உள்ள குரூஸ் பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமாகா: தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மத்திய மாவட்ட தலைவா் எஸ்.டி.ஆா்.விஜயசீலன் தலைமையில் குரூஸ் பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சமத்துவ மக்கள் கழகம் சாா்பில் மாவட்ட செயலா் மாலைசூடி அற்புதராஜ் தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையிலும் குரூஸ் பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பல அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.