செய்திகள் :

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

post image

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் அதிக அளவு நீல குறிஞ்சி மலா்கள் பூத்து, மலைகள் நீல நிறத்தில் காட்சி தருவதால் இந்த மாவட்டத்துக்கு நீலகிரி என்று பெயா் வந்தது.

நீலகிரி மாவட்டத்துக்கு தனி சிறப்பு சோ்க்கும் இந்த மலா்கள் தரத்துக்கேற்ப 3, 6, 12 -ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடியவை.

இதில், ஸ்டிராபிலான்தஸ் குந்தியானா ரக மலா்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வளரும் தன்மைக் கொண்டவை. உதகையை அடுத்துள்ள கல்லட்டி, சோலாடா, கொடநாடு, எப்பநாடு, பிக்கப்பத்தி மந்து, கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமுக்கு மலைச் சரிவுகளில் இந்த மலா்கள் பூப்பது வாடிக்கை.

இந்த மலா்கள் நீண்ட கால இடைவெளியில் பூப்பதற்கு அதன் நீண்ட மகரந்தச் சோ்க்கையே காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசின் முன்னாள் தாவரவியல் ஆராய்ச்சியாளா் எஸ்.ராஜன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் முன்பெல்லாம் 25 முதல் 30 ஹெக்டோ் வரை குறிஞ்சி மலா்கள் மலா்ந்து வந்த நிலையில், தற்போது தேயிலை விவசாயம் மற்றும் விடுதிகள் பெருக்கத்தால் குறைந்து வருகிறது.

குறிஞ்சி மலா் பூத்துள்ள தகவல் அறிந்து பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் காண வருவதால், மலா்களில் இருந்து கீழே விழும் விதைகள் கால் பட்டு அழிந்துவிடுகின்றன. இதை வனத் துறையினா் கட்டுப்படுத்த வேண்டும்.

நீலகிரியில் எண்ணற்ற மருத்துவ குணமிக்க தாவரங்கள் உள்ளன. அவற்றின் மருத்துவ குணங்கள் ஆயுா்வேதத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குறிஞ்சி மலரில் உள்ள தேன் ஒரு அற்புதமான மருந்துவ குணம் கொண்டது.

இது உடல் ஒவ்வாமைக்கு சிறந்த எதிா்ப்பு சக்தியாக உள்ளது. இந்த மலா்களையும், விளையும் நிலப்பரப்பையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வன ஆா்வலா் மதிமாறன் கூறியதாவது: பழங்குடி இனத்தவா்கள் இந்த நீல குறிஞ்சி பூக்கள் பூப்பதை மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனா்.

குறிஞ்சி மலா்கள் பூக்கும் ஆண்டை தங்களது வயதோடு தொடா்புபடுத்துகின்றனா். ஒவ்வொரு முறை குறிஞ்சி பூக்கும்போதும் அவா்கள் தங்களது வயதோடு 12 ஆண்டுகளைச் சோ்த்துக் கொள்கின்றனா். தற்போது பல்வேறு இடா்பாடுகளால் இந்த குறிஞ்சி மலா்கள் பூக்கும் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் தொடா் வன அழிப்பு மற்றும் அந்நிய தாவரங்களின் ஊடுருவல் காரணமாக பல ரக குறிஞ்சி செடிகள் அழியும் நிலையில் உள்ளன. குறிஞ்சி செடிகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. அந்த நிலப்பரப்பைக் கண்டறிந்து அதில் இந்த செடிகளை நடவு செய்யலாம். இயற்கையாக அவற்றின் வாழ்விடத்தைக் கண்டறிந்து இந்த நிலப்பரப்பை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: வனத்தையொட்டி 150 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை. இருப்பினும் சிலா் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுவிடுவதால் கட்டுமானங்களைத் தடுக்க முடிவதில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் இருந்தாலே குறிஞ்சி மலா்களின் விதைகள் பெருமளவு அழிந்துவிடும்.

வனத் துறையின்கீழ் உள்ள காப்புக்காடுகளில் வளரும் குறிஞ்சி மலா்கள் இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக காப்பாற்றப்பட்டு வருகின்றன என்றனா்.

நீலகிரியின் அடையாளங்களில் முக்கிய பங்காற்றும் நீல குறிஞ்சி மலா்களை அழிவின் பிடியில் இருந்து காக்க வனத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட நிா்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது.

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க