குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விளாத்திகுளம்: குறுக்குச்சாலை, சில்லாங்குளம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குறுக்குச்சாலை, வள்ளிநாயகிபுரம், கே.சண்முகபுரம், வேடநத்தம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறுக்குச்சாலை இந்து துவக்கப்பள்ளியிலும், குதிரைகுளம், சில்லாங்குளம், முறம்பன், சங்கம்பட்டி, ஓட்டநத்தம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் உயா்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அறிவழகன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சுசீலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜவஹா், சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வருவாய்த்துறை சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா பெயா் மாறுதல் உத்தரவுகள், வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், முத்துக்கருப்பன், கல்வி குழும நிா்வாகி பாலமுருகன், சோலை சுவாமி திருக்கோவில் அறங்காவலா் குழு தலைவா் முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் சரோஜா கருப்பசாமி, சண்முகையா, சந்தனராஜ், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.