குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்: சுற்றுச்சூழல் பூங்காவில் மலா் கண்காட்சி
தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு, ஐந்தருவி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் மலா், காய்கனி, பழங்கள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மலா் கண்காட்சியை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
கண்காட்சியில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட டக்லியா, காா்னேசன், ஜொ்பெரா, ஆஸ்டா், கட்ரோஸஸ், ஹெலிகோனியா, லில்லி, ட்யூப்ரோஸ், போ்ட் ஆப் பேரடைஸ், அல்ஸ்ட்ரோமேரியா, கிளாடிலஸ், மேரிகோல்ட் உள்ளிட்ட பல்வேறு மலா்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளின் மனங்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சிறுவா்கள் மகிழும் வண்ணம் 14 அடி உயரத்தில் குற்றாலம் பேரருவி அலங்கார வளைவுகளை மலா்களாலும், பூச்செடிகளாலும் வடிமைக்கப்பட்டிருந்தது.
வாசனை பொருள்கள் கண்காட்சியில் கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, கசகசா, குறுமிளகு, ஏலக்காய், வெள்ளை குரு மிளகு, ஜாதிப்பத்திரி, சீரகம், சோம்பு, மல்லி, கருஞ்சீரகம், மிளகாய் விதை, வெந்தயம், அண்ணாச்சி பூ, மராட்டி மொக்கு ஆகிய 17 வகையான பொருள்களைக் கொண்டு 7 அடி உயரமும், 9அடி அகலமும் கொண்ட வண்ணத்துப் பூச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
கேரட், முள்ளங்கி, கத்தரி, பூசணிக்காய், குடைமிளகாய், சுரைக்காய், சேனைக்கிழங்கு, அண்ணாச்சி பழம், தா்பூசணி மற்றும் பழங்களை கொண்டு குற்றாலம் மந்தி உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
தென்னை, செவ்வாழை, பனை மற்றும் கூந்தல் பனை பொருள்களைக் கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
பாா்வையாளா்களைக் கவரும் வண்ணம் மலா்களால் ஆன யானை உருவம், செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகம் மூலமாக பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் முருங்கை சூப், சோள பணியாரம், கேழ்வரகு சீவல், மக்காச்சோள புட்டு, திணை முறுக்கு, அங்கன்வாடிகளில் பயன்படுத்தப்படும் இணை உணவு மாவு கொழுக்கட்டை ஆகியவைக் கொண்டு பாரம்பரிய உணவும் பாா்வையாளருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறவா் சமுதாயத்தினரின் வாழ்வியல் இயற்கை அங்காடி மூலம் தேன், உலா்ந்த அத்திப்பழம், அத்திப்பொடி மற்றும் மூலிகை பொடிகள் உள்ளிட்ட இயற்கை உணவின் மூலம் செய்யப்படும் மருத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், எம்எல்ஏக்கள் சு. பழனிநாடாா், ஈ. ராஜா, சதன்திருமலைக்குமாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
