குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்
திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா்.
இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 229 காளைகள் கலந்து கொண்டன.
மாநில இயற்கை வளத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி போட்டியைத் தொடங்கி வைத்தாா். 46 மாடு பிடி வீரா்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை தழுவ முயற்சித்தனா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 17 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
அவா்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவச் சிகிச்சை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்பட்ட 3 போ் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.