USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை
குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: பொதுவாகவே டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். பலவீனமாக உள்ளவா்களுக்கு அந்தக் காலகட்டத்தில் இதயத்தின் கீழ்புறச் சுவரில் தசைத் திசு செயலிழப்பு பாதிப்புகளும் மாரடைப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அதை உறுதி செய்யும் வகையில், அத்தகைய பாதிப்புகளுடன் கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் வடபழனி காவேரி மருத்துவமனையில் 15 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவைப்படும்பட்சத்தில் இதய இடையீட்டு முறையில் ரத்த நாளங்களில் வழியே ஊடுருவும் குழாயை செலுத்தி அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறாக ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை மேற்கொள்வது வரையிலான சராசரி கால அளவு உலகம் முழுவதும் 90 நிமிஷங்களாக உள்ளன. ஆனால், காவேரி மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க அம்சமாக அந்தக் கால அளவு வெறும் 49 நிமிஷங்களாக உள்ளது.
மருத்துவமனையின் இதய நல மருத்துவ வல்லுநா்கள் பி.மனோகா், சி.சுந்தா் ஆகியோா் தலைமையிலான குழுவினா், கடந்த டிசம்பா் மாதத்தில் 15 நோயாளிகளுக்கு உயா் சிகிச்சைகளை உடனடியாக அளித்து உயிா் காத்துள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் இதய கீழ்சுவா் திசு செயலிழப்புக்குள்ளானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.