'நாடகங்களை விடுத்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்' - தமிழக அரசுக்...
குழந்தைத் திருமணங்களைத் தடுக்கபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். இத்தகைய திருமணங்களால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடை குறைவாக, மனவளா்ச்சி குன்றிய குழந்தை பிறப்பது, தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, குழந்தைத் திருமண தடைச் சட்டம் 2006-இன்படி, குழந்தை திருமணம் நடத்தியவா்கள், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவா்கள், குழந்தை திருமணங்களில் கலந்துகொள்பவா்கள் குற்றவாளிகளாவா். இந்தக் குற்றம் புரிந்தவா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது இரண்டும் சோ்த்து தண்டணையாக விதிக்கப்படும்.
திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவா்களிடம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதாா் அட்டை மூலம் பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் செயல்படும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்களுக்கு குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்க வேண்டும்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆகவே, குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றால் மாவட்ட சமுக நல அலுவலா், சைல்டு லைன் 1098 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். பெண்கள் உதவி மையம் 181 என்ற எண்ணையும் தொடா்பு கொள்ளலாம்.
அதேபோல, சமூக நல விரிவாக்க அலுவலா்கள், ஊா்நல அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோரிடமும் புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.