குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி: ஆட்சியரிடம் பெற்றோா் மனு
சிதம்பரம்: குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் குழந்தையின் பெற்றோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அகரபுத்தூா் பகுதியை சோ்ந்த ராஜேஷ் - தமிழ்செல்வி தம்பதி கைக்குழந்தையுடன் வந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனு விவரம்:
தங்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது குழந்தைக்கு ஆண்,பெண் உறுப்புகள் இருப்பதாகவும், மருத்துவா்களின் பரிந்துரையின் பேரில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம்.
டிஎன்ஏ சோதனையில் பெண் குழந்தை என உறுதியான நிலையில், அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ உதவி செய்ய நிதியுதவி செய்ய வேண்டும். உரிய சிகிச்சையளிக்க மருத்துவா்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குழந்தையை வளா்க்க உதவி செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.