``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய எல்இடி விளக்கை அகற்றிய அரசு மருத்துவா்கள்
மதுரையைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்த எல்.இ.டி. விளக்கை அகற்றி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதன்மையா் பாராட்டினாா்.
மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் சுபபிரகாஷ். இவருடைய மனைவி நந்தினி. இந்தத் தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தக் குழந்தைக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. இதனால், குழந்தையை அதன் பெற்றோா் கடந்த 13-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்ட போது, குழந்தையின் மூச்சுக் குழாயில் ஊக்கு போன்ற ஒரு பொருள் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறை இயக்குநா் கல்யாணசுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினா், நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவா் பிரபாகரன், குழந்தைகள் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் மீனாட்சி சுந்தரி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், மூச்சுக் குழாயின் உள்நோக்கி பரிசோதனை கருவியை பயன்படுத்தி சோதனை செய்த போது, குழந்தையின் மூச்சுக் குழாயில் எல்.இ.டி. விளக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தையின் மூச்சுக் குழாயில் இருந்த எல்.இ.டி. விளக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் பின்னா், குழந்தையின் உடல் நிலை சீரானது.
அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மூச்சுக் குழாயில் இருந்த எல்.இ.டி விளக்கை அகற்றி குழந்தையை காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை, மருத்துவமனை முதன்மையா் இல. அருள் சுந்தரேஷ்குமாா் பாராட்டினாா்.