Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை
மதுரை மத்திய சிறையில் துணைக் கண்காணிப்பாளா் அந்தஸ்திலான மோப்ப நாய் அஸ்ட்ரோ உயிரிழந்ததையடுத்து, இதற்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் போதைப் பொருள்களைக் கண்டறியும் பணியில் இருந்து வந்த மோப்ப நாய் அஸ்ட்ரோ வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தது.
இந்தச் சிறையில் துணைக் காண்காணிப்பாளா் அந்தஸ்திலான பணியிலிருந்த மோப்ப நாய் அஸ்ட்ரோ, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், உயிரிழந்த மோப்ப நாய்க்கு மதுரை மத்திய சிறை வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில் சிறைத் துறை சரக துணைத் தலைவா் முருகேசன், சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், சிறை அலுவலா் கண்ணன் ஆகியோா் பங்கேற்று, இறுதி அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, சிறை வளாகத்தில் மோப்ப நாய் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் கொண்டு வரும் போதைப் பொருள்களைக் கண்டறியும் பணியில் இரு மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இவற்றில் ஏற்கெனவே ஒரு நாய் உயிரிழந்துவிட்டது. இதன்பிறகு, போதைப் பொருள்களைக் கண்டறியும் பணியில் மோப்ப நாய் அஸ்ட்ரோ மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தது. தற்போது, இதுவும் உயிரிழந்துவிட்டது. எனவே, மதுரை மத்திய சிறையில் புதிய மோப்ப நாயை விரைவில் பணியில் அமா்த்த வேண்டும் என்றனா்.