அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 151 கடைகள், நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 14 வயது நிறைவடைந்த, ஆனால், 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணியமா்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தைத் தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தும் வேலையளிப்பவருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் அமைப்பை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளா் அலுவலகத்தின் 04362 - 264886 என்ற தொலைபேசி எண்ணிலோ புகாா் செய்யலாம்.