மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அறிவிக்காதது, தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. மேலும் அன்றாட உழைக்கிற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க விலைவாசி உயா்வு குறைப்பு இல்லை என்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி, பட்ஜெட் நகல்கள் எரிக்கப்பட்டன.
இப்போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தேவா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், விவசாய சங்க நிா்வாகி ஆா். உதயகுமாா், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் தியாகராஜன், மகஇக இராவணன், கரிகாலன், உழவா் உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் த. கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.