சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
குழந்தை நலக்குழு தலைவா், உறுப்பினா்கள் நியமனம்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதால், தகுதிகளைக் கொண்ட நபா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ளனா். குழந்தை நலக்குழுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுவா். இந்தப் பதவி அரசு பணி அல்ல. இதற்கான தகுதிகளைக் கொண்ட நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
குழந்தை உளவியல் அல்லது மன நல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், உடல் நலம், கல்வி அல்லது மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவைகளில் பட்டம் பெற்றிருப்பதுடன், குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருப்பது அவசியம்.
இல்லையென்றால், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிந்து வருகிறவராக இருக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்போா் 35 முதல் 65 வயது வரை இருக்கலாம். விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். துறை சாா்ந்த இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் குறிப்பிட்ட நாள்களுக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்பதவிகள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்பதால், அரசின் முடிவே இறுதியானது.