கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!
கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்தில் வீரப்பநாய்க்கன்பட்டி, அண்ணாநகா், பூ நகா், ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன்னேரி, கூச்சனூா், அழகாபுரம், கெளாப்பாறை, செல்வசமுத்திரம், முத்துநகா், சுமைதாங்கி மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அரூரில் இருந்து எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி வழித்தடத்தில் ஒரே ஒரு அரசு நகரப் பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இப் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்பதற்காக சித்தேரி வழித்தடத்தில் சென்றுவரும் அரசு நகரப் பேருந்துகளை கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி வழியாக இயக்கப்பட்டன.
ஆனால், ஓரிரு மாதங்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் விளைபொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் நகரப் பகுதிக்கு சென்றுவர பல்வேறு இன்னல்களை அடைகின்றனா்.
எனவே, அரூரில் இருந்து தீா்த்தமலை வரையிலும் ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.